இளங்கலை (மேதமை) வேளாண்மை (தமிழ் வழி)

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டு, இளங்கலை (மேதமை) வேளாண்மை பட்டப்படிப்பு தமிழ் வழியில் ஆரம்பிக்கப்பட்டது.

இளங்கலை (மேதமை) வேளாண்மைப் பாடத்திட்டம்

இளங்கலை (மேதமை) வேளாண்மை (தமிழ் வழி) என்பது நான்கு வருட பாடத்திட்டமாகும். இப்பாடத்திட்டத்தில் வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த அறிவியலுக்கான அடிப்படை படிப்புகள் உள்ளன. மாணவர்கள் இளங்கலை (மேதமை) வேளாண்மை படிப்பில் வேளாண்மை, ஆய்வகப்பயிற்சி, தொழில் பயிற்சி மற்றும் கற்கும் பொழுதே பணம் ஈட்டுவதற்கான வேளாண் தொழில் அனுபவம் சார்ந்த கற்றல் படிப்புகள் முதலியவற்றை சிறந்த முறையில் கற்றுக்கொள்வார்கள்.

கற்பித்தல் முறையானது விரிவுரைகள், பண்ணை வேலைகள், ஆய்வகப்பயிற்சி மற்றும் விளக்கக்காட்சிகளை உள்ளடக்கியது. இப்படிப்பு விவசாயத் திறன்களை அறிவியல் பின்புலத்துடன் கற்க வழி வகை செய்கிறது.

தமிழ் வழி படிப்பின் சிறப்பு

மாணாக்கர்கள் தமிழ்வழியே வேளாண் படிப்பை மேற்கொள்வதினால் பாடங்களை எளிமையாகவும், தெளிவாகவும், புரிதலோடும் உள்வாங்கிக் கொள்ள ஏதுவாகின்றது. இத்தகைய ஆழ்ந்த புரிதல், ஆக்கபூர்வமான சிந்தனைகளோடு  வேளாண் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

விரிவாக்ககல்வி மூலம் வேளாண் சமூகத்தை படிப்பது இப்படிப்பின் தனித்துவமான சமூக அறிவியல் கண்ணோட்டமாகும். வேளாண் குடிகளோடு சரளமாக கலந்துரையாடி, அவர்கள் பாரம்பரியமாக பின்பற்றிவரும் வேளாண் நுட்பங்கள் மற்றும் அணுகுமுறைகளை கற்றுக்கொள்ள தமிழ் வழி பயிலும் மாணாக்கர்களால் மட்டுமே முடியும். மேலும், களத்தில் விவசாயிகள் உண்மையில் எதிர் கொள்ளும் சமூகப் பிரச்னைகளை எளிதில் கண்டறிந்து ஆராய முடியும்.

புதிய வேளாண் தொழில்நுட்பங்களை பாமரமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் சொவ்வனே எடுத்தியம்ப தமிழ் வழி பயிலும் மாணாக்கர்களால் மட்டுமே இயலும்.

எதிர் வரும் காலத்தில், தமிழ் மொழியிலேயே வேளாண் பாடநூல்கள் கொண்டு வருவதினால், வேளாண் தகவல் களஞ்சியம் உருவாகி வேளாண் பெருமக்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணக்கர்கள் பயன் பெறுவார்கள்.

மாணாக்கர்களின் பார்வையில்

தமிழ்மொழியில் பயிலும் நான் வேளாண் தொடர்பான அனைத்து கலைச்சொற்களையும் தமிழில் தெரிந்து கொள்வதன் மூலம் விவசாயிகளிடம் வேளாண் தொழில்நுட்பங்களை எளிதில் கொண்டு சேர்க்கவும், ஐயப்பாடுகளை தீர்க்கவும், கலந்துரையாடவும் முடிகிறது.


தமிழ்நாட்டில், தமிழ் வழியில் உயிரிதொழில்நுட்ப கல்வி என்பது வேளாண்மையில் மட்டுமே உள்ளது. இதன்மூலம் தமிழ் வழியில் பள்ளி கல்வி முடித்த நானும் ஒரு சிறந்த தொழில்நுட்பக் கல்வி பயில வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் இளங்கலை (மேதமை) வேளாண்மை (தமிழ் வழி) படிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

Application Process:

School of Postgraduate Studies
Tamil Nadu Agricultural University
Coimbatore-641003,
Tamil Nadu, India.
Phone: +91 422 6611461, 261
Fax: +91 422 6611343